புதுக்கவிதை.
எச்சம்
என், முன் தோன்றிகாள், நான் உங்கள் மிச்சமும் இல்லை.
எச்சமும் இல்லை.
என் உயிர், உடல், மொழி, அனைத்திலும் உங்கள் அடையாளம்;
என் எண்ணங்கள் எனதாக இருக்கும்.
என் கருவறையை, எனக்கு களமாகக் கொள்வதெப்படி
முட்டைக்குள்ளே, முழுமை பெறலாம் முக்தி பெற முடியாது.
உங்கள், கனவுகளோடு நான் ஓடிக் கொண்டிருந்தால், என்
சிறகுகளும் எனக்கு பாரம் தான்.
என் பாதையைப் பற்றிக் கவலை கொள்ளாதிர்கள், என்
பயணம் திசைகள் அறியாது.
நீங்கள் வேலியிட்டது நிலத்திற்கு, அதன் மேல்
பூக்கும் விண்மீன்கள் யார் சொந்தம் ?.
நீங்கள் மென்றதை நான் விழுங்கினேன், போதும் நீங்கள்
செரித்தவற்றையும் எனக்கு ஊட்டாதீர்கள்.
உங்கள் எச்சத்தைத் தின்று, நான் என்னத்தைச் செரிப்பது.
-ஜெ.கந்தசாமி பாண்டியன்.
23, சூலை 2010.
பெற்றோர்களும் சரி, முன்னோர்களும் சரி. தங்களது, குழந்தைகளை, இளைய தலைமுறையை தங்கள் கனவுகளையும், வாழ்க்கையையும் தொடர்ந்து எடுத்துச் செல்லும் ஒரு சாதனமாகத்தான், பார்க்கிறார்கள். தங்களது கருத்துகளையும், ரசனைகளையும், மேதாவித்தனத்தையும் இளைய தலைமுறை மீது தினிக்கிறார்கள்.
ஆக, அந்த குழந்தை தனது எல்லா வெளிப்பாடுகளிலும், தனது பெற்றோரின் அடையாளத்தைக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் அவர்களுக்கு, கொடுக்க இருக்கும் வாய்ப்புகளுக்கும், ஆச்சர்யங்களுக்கும் இடையில், கடமை, அனுபவம் என்கிற கருவிகள் கொண்டு தடையாய் நிற்கிறார்கள். வாழ்க்கையில், தாங்கள் மென்று செரித்த விடயங்களை/எச்சங்களை தங்களது குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள், அக்கறை என்ற பெயரில். இப்படியாக, தங்கள் பிரதிகளையே இந்த பூமியெங்கும் விட்டச் செல்ல முனைகிறார்கள். இந்த பின் புலத்தில், தனது சிந்தனைகளிலும்,செயல்களிலும் பெற்றொர்களின்/முன்னோர்களின் அடையாளத்தை மறுக்கும், தன் சுய அடையாளம் தேடத் துடிக்கும் ஒரு இளைஞனின் மறுதலிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக